Friday 4 August 2017

வையவன் மகாபாரதம்-2

வையவன் மகாபாரதம்-2

----------------------------------------------
விநாயகர் போட்ட நிபந்தனை 
----------------------------------------------------
[மகாபாரதத்தின் கதை அனைவரும் அறிந்தது தான். பலர் பல பார்வைகளில் அதை எழுதினர்; எழுதியும் வருகின்றனர். ஆனால் அதை இயற்றிய வியாசருக்கும் ஒரு பார்வை இருந்திருக்கும். அதையொட்டி, அது ஏன் தோன்றியது என்பதற்குப் பலர் பல விளக்கங்கள் அளித்துள்ளனர். என் பார்வையில் எழுத்தாணி பிடித்தவர், எழுதவைத்தவர் இருவருக்குமிடையே நடந்ததைக் கற்பனையில் சுட்டிக்காட்ட 
வேண்டும் என்று தோன்றியது .அதன் விளைவே பின் வரும் உரையாடல்
"
வியாசா ! என் நிபந்தனை நினைவிருக்கிறதா?"
"
இருக்கிறது கணநாதா!"
"
சொல்"
"
நான் சொல்லச் சொல்ல தங்கள் எழுத்தாணி ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு கணம் நான் நிறுத்தினாலும் தாங்கள் எழுந்து சென்றுவிடுவீர்கள்!"
"
நல்லது. ஒரு பணியைத் துவங்கும் முன் ஏன் துவங்குகிறோம் என்று யோசிப்பது சரி தானே துவைபாயனா?"
"
தாங்கள் அறியாதது எதுவுமில்லை விக்னேஸ்வரா!"
"
என்னைக் கருவியாக்கி நீ எதற்கு இந்த இதிகாசத்தைப் படைக்கப்போகிறாய்?பாரத வம்சத்தில் யார் யார் பிறந்து வாழ்ந்து போராடி மாண்டுபோனார்கள் என்ற வம்ச சரித்திரம் படைக்கவா ?"
"
இல்லை பிரபோ! ஒவ்வொரு ஜனன மரணத்தின் பின்னும் தர்ம நீதி நின்று தொடர்வதைக் காட்டவே. தெய்வ சித்தம் ஒவ்வொரு சம்பவத்தின் பின்னும் மறைந்திருப்பதை விளக்கவே இந்த இதிகாசம் படைக்கிறேன்"
"
ததாஸ்து..ஆரம்பி"
"
தொடங்கும் முன் ஒரு விண்ணப்பம். தாங்கள் எனக்கு ஒரு சலுகை வழங்கி இருக்கிறீர்கள்" வியாசர் நினைவூட்டினார் .
"
மறக்கவில்லை.எங்காவது, ஏதாவது எனக்குப் புரியாதபோது, தொடர்ந்து எழுதுவதை நிறுத்துவேன். புரிந்து கொண்டு தான் எதையும் எழுதுவேன் "
"
சாஷ்டாங்க நமஸ்காரம். தொடங்குகிறேன் பிரபோ!."
ஓம் என்று மும்முறை கூறிவிட்டு விநாயகர் எழுதத்தொடங்கினார்.
வியாசர் விநாயகரின் எழுதும் வேகத்தைத் தாமதப்படுத்த நெருக்கமாகப் பின்னிய எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத
சுலோகங்களை இடையிடையே சொன்னார். அந்தக் கடினமான சுலோகங்களுக்குள் நுழைந்து ஊடுருவிப் புரிந்து கொள்ள யாராலும்இந்நாள் வரை முடியவில்லை அனைத்தையும் அறிந்த கணேசனே கூட, கருத்தில் கொள்ள ஒரு கணத்தை எடுத்துக் கொண்டான்.அந்தத்தாமதத்தை வைத்து வியாசர், தொடர்ந்து வேறு செய்யுள்களை அதிவேகமாக இயற்றினார்.ஆங்காங்கே செய்யுள்களில் சிற்சில முடிச்சுகள் வைத்தார்.விநாயகர் புரிந்து கொள்ள முயலும் போது அடுத்த சுலோகத்திற்குப் போனார்.
வியாசரின் தந்திரம் விநாயகருக்குப் புரிந்தது. அவரது நோக்கத்தின் புனிதத்தன்மையைக்கருதி அதை ஏற்று எழுதிச்சென்றார்.
வியாசரின் சிந்தனை எந்த வம்சத்தின் தொடக்கத்திற்கும் பெண்ணாசையே வித்தாக இருப்பதை உணர்ந்தது
கங்கா நதியே ஒரு பேரழகியாக வடிவெடுத்து நதியின் கரையில் நிற்கிற சித்திரம் அவர் மனக்கண்ணில் தோன்றியது. வியாசர் இதயம் அம்மா ..அம்மா என்று தாய்ப்பாசத்தால் விம்மியது. அடக்கிக்கொண்டு மஹாபாரதக் கதையைச் சொல்லத்தொடங்கினார் அவர் கருத்து கங்கை நதிக்குச் சென்றது. அவர் சொல்லத்தொடங்கினார்! [தொடரும்]

Thursday 3 August 2017

வையவன் மகாபாரதம்-1

வையவன் மகாபாரதம்-1
.

-----------------------------------------

வேதவியாசர் எழுதிவைத்துச் சென்றபின் எத்தனையோ மொழிகளில் எத்தனையோ போக்குகளில் மகாபாரதம் திரைப்படமாக, டிவி சீரியல்களாக , காவியங்களாக , உரைநடைச் சித்திரங்களாக , நாவல்களாகத் தோன்றிவிட்டன. இனியும் வரும். அலைகடல் உள்ள வரையில் மகாபாரதத்தின் அலைகள் அடித்தபடியே தான் இருக்கும்.
எனினும் எத்தனை மகாபாரதங்கள் தோன்றினாலும் எளிய, எல்லாரும் சுலபமாக அறிந்துகொள்ளும் மகாபாரதம் எழுதவேண்டுமென்ற என் எண்ணம் மாறவேயில்லை. முன்னர் முகநூலில் குருக்ஷேத்ரம் என்ற தலைப்பில் ஒரு பதிவை த்தொடங்கி சற்று இடைவெளி விட்டேன். அந்தப்பிழையை ஈடு செய்ய மிக எளிய முறையில் நான் எழுத முயலும் தொடர் பதிவு இது.
ஞான முதல்வன் 
வேத விநாயகன் 
வியாசரின் சிந்தையில் 
அமர்ந்து விக்கினம் 
நீக்கி பாரதம் தொடரத் 
துணைநின்ற 
விக்னேஸ்வரரின்
பாதம் பணிந்துப்
பதிவைத்தொடர்கிறேன் 
----------------------------------------------------------------------------------------
'பரத சக்ரவர்த்தியின் வழி வழியே தொடர்ந்து பாரத தேசத்தில் நிகழ்ந்துவரும் சரித்திரத்தைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டால் எதிர்கால மக்களுக்கு வழிகாட்டுவோர் யார்?' 
எது நீதி?எது தர்மம்? எது நிலைத்து நிற்கப்போவது? அறிவிக்க ஒருவர் இல்லையேல் மனித குலம் அதை எவ்வாறு அறியும்?
இந்தச்சிந்தனையோடு அமர்ந்திருந்தார் ஒரு மகரிஷி . பரத வம்சத்தின் கதை படலம் படலமாக அவர் மனக்கண்ணில் விரிந்தது 
இந்தச்சிந்தனையோடு அமர்ந்திருந்தார் ஒரு மகரிஷி . பரத வம்சத்தின் கதை படலம் படலமாக அவர் மனக்கண்ணில் விரிந்தது.நூற்றுக்கணக்கான கதைகள்; அதையொட்டி விரிந்த நூறு நூறு கிளைக்கதைகள். எண்ணத்தில் விரிந்த அவற்றை எழுத்தாணியால் செதுக்கி எழுத்திலே, ஓலைச்சுவடியிலே பதித்துவிட்டால் அவை என்றென்றும் அழியாது. ஆனால் மனோவேகத்தோடு பாய்ந்துவரும் சொற்களைக் கருத்துச் சிதறாது என்னால் மட்டுமே செய்துவிட முடியுமா?அவற்றை எழுத்துருவாக்கித் தரத்தக்க வலிமை எனக்கில்லையே! யார் உதவுவார்கள்?
அந்த மகரிஷி தியானத்தில் அமர்ந்தார்.
நீண்டு நிலைத்த அசைவற்ற தியானம். தியானத்தின் விளைவாக பிரம்மா அவர் முன் தோன்றினார் 
''பராசர மைந்தா, வியாசா? என்ன உன் கோரிக்கை?"
"மஹாப்ரபோ! நான் பாரதம் எழுத விரும்புகிறேன்."
"சரி. எழுது"
"ஆனால் எண்ணத்தின் வேகத்திற்கு இணையாக என்னால் எழுத இயலாது மஹாப்ரபோ!"
பிரம்மா ஒரு கணம் யோசித்தார்.
" ஒன்று செய். ஈஸ்வர புத்திரனான விக்னேஸ்வரரைத் தியானித்து வணங்கு. அவர் வழிகாட்டுவார்"
வியாசர்வணங்கினார். பிரம்மா மறைந்தார். வியாசரின் தியானம் தொடர்ந்தது.விநாயகரை நினைத்து.
வெகு நீண்ட தியானத்தின் விளைவாக விநாயகர் வியாசரின் முன் தோன்றினார்.
" என்ன வேண்டும் வைசம்பாயனா?"
" மஹாப்ரபோ,தங்கள் துணையோடு நான் மகாபாரதம் எழுதவேண்டும்?"
"என் துணை எதற்கு? நீயே எழுது"
"மஹாப்ரபோ, என்னால் கற்பனையில் கோர்க்கத்தான் முடியும்.எழுத இயலாது."
விநாயகர் சிரித்தார்,
"சரி, நான் என்ன செய்யவேண்டும்?"
" நான் சொல்லிக்கொண்டே போவேன். தாங்கள் எழுதிக்கொண்டே வரவேண்டும்"
விநாயகர் சிந்தித்தார். பிறகு சொன்னார்.
"நீ சிந்தித்துச் சொல்கிறவரை என்னால் காத்திருக்க முடியாது. நீ சொல்வதை எல்லாம் நான் ஒரே மூச்சாக எழுதிச்செல்வேன்.நீ இடைவிடாமல் சொல்லிக்கொண்டு வரவேண்டும். சற்று நிறுத்தினால் நான் தொடர மாட்டேன். எழுந்து போய்விடுவேன்"
"ஐயனே,நான் மானுடன்.தாங்கள் கணாதிபதி. சற்று கருணை காட்டக்கூடாதா?"
விநாயகர் சிரித்தார் 
"சரி. நீ சொல்லிவருவது என் கருத்தில் தெளிவாகப் பதிகிறவரை காத்திருந்து எழுதுவேன். அதுவரை நிறுத்திவைப்பேன்"
விநாயகப்பெருமானே சற்று விட்டுக்கொடுத்திருப்பதில் வியாசருக்குச் சற்று நிம்மதி. 
ஆனால் எல்லா வித்தைகளும் தலைவனான விநாயகர் கருத்தில் தெளிவாகப் பதியாதபடி என்ன சொல்லப்போகிறோம்? 
எப்படி எழுதப்போகிறோம்? கவலை பிறந்தது. கூடவே ஒரு தெளிவும் எழுந்தது.
[தொடரும்]