Friday, 4 August 2017

வையவன் மகாபாரதம்-2

வையவன் மகாபாரதம்-2

----------------------------------------------
விநாயகர் போட்ட நிபந்தனை 
----------------------------------------------------
[மகாபாரதத்தின் கதை அனைவரும் அறிந்தது தான். பலர் பல பார்வைகளில் அதை எழுதினர்; எழுதியும் வருகின்றனர். ஆனால் அதை இயற்றிய வியாசருக்கும் ஒரு பார்வை இருந்திருக்கும். அதையொட்டி, அது ஏன் தோன்றியது என்பதற்குப் பலர் பல விளக்கங்கள் அளித்துள்ளனர். என் பார்வையில் எழுத்தாணி பிடித்தவர், எழுதவைத்தவர் இருவருக்குமிடையே நடந்ததைக் கற்பனையில் சுட்டிக்காட்ட 
வேண்டும் என்று தோன்றியது .அதன் விளைவே பின் வரும் உரையாடல்
"
வியாசா ! என் நிபந்தனை நினைவிருக்கிறதா?"
"
இருக்கிறது கணநாதா!"
"
சொல்"
"
நான் சொல்லச் சொல்ல தங்கள் எழுத்தாணி ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு கணம் நான் நிறுத்தினாலும் தாங்கள் எழுந்து சென்றுவிடுவீர்கள்!"
"
நல்லது. ஒரு பணியைத் துவங்கும் முன் ஏன் துவங்குகிறோம் என்று யோசிப்பது சரி தானே துவைபாயனா?"
"
தாங்கள் அறியாதது எதுவுமில்லை விக்னேஸ்வரா!"
"
என்னைக் கருவியாக்கி நீ எதற்கு இந்த இதிகாசத்தைப் படைக்கப்போகிறாய்?பாரத வம்சத்தில் யார் யார் பிறந்து வாழ்ந்து போராடி மாண்டுபோனார்கள் என்ற வம்ச சரித்திரம் படைக்கவா ?"
"
இல்லை பிரபோ! ஒவ்வொரு ஜனன மரணத்தின் பின்னும் தர்ம நீதி நின்று தொடர்வதைக் காட்டவே. தெய்வ சித்தம் ஒவ்வொரு சம்பவத்தின் பின்னும் மறைந்திருப்பதை விளக்கவே இந்த இதிகாசம் படைக்கிறேன்"
"
ததாஸ்து..ஆரம்பி"
"
தொடங்கும் முன் ஒரு விண்ணப்பம். தாங்கள் எனக்கு ஒரு சலுகை வழங்கி இருக்கிறீர்கள்" வியாசர் நினைவூட்டினார் .
"
மறக்கவில்லை.எங்காவது, ஏதாவது எனக்குப் புரியாதபோது, தொடர்ந்து எழுதுவதை நிறுத்துவேன். புரிந்து கொண்டு தான் எதையும் எழுதுவேன் "
"
சாஷ்டாங்க நமஸ்காரம். தொடங்குகிறேன் பிரபோ!."
ஓம் என்று மும்முறை கூறிவிட்டு விநாயகர் எழுதத்தொடங்கினார்.
வியாசர் விநாயகரின் எழுதும் வேகத்தைத் தாமதப்படுத்த நெருக்கமாகப் பின்னிய எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத
சுலோகங்களை இடையிடையே சொன்னார். அந்தக் கடினமான சுலோகங்களுக்குள் நுழைந்து ஊடுருவிப் புரிந்து கொள்ள யாராலும்இந்நாள் வரை முடியவில்லை அனைத்தையும் அறிந்த கணேசனே கூட, கருத்தில் கொள்ள ஒரு கணத்தை எடுத்துக் கொண்டான்.அந்தத்தாமதத்தை வைத்து வியாசர், தொடர்ந்து வேறு செய்யுள்களை அதிவேகமாக இயற்றினார்.ஆங்காங்கே செய்யுள்களில் சிற்சில முடிச்சுகள் வைத்தார்.விநாயகர் புரிந்து கொள்ள முயலும் போது அடுத்த சுலோகத்திற்குப் போனார்.
வியாசரின் தந்திரம் விநாயகருக்குப் புரிந்தது. அவரது நோக்கத்தின் புனிதத்தன்மையைக்கருதி அதை ஏற்று எழுதிச்சென்றார்.
வியாசரின் சிந்தனை எந்த வம்சத்தின் தொடக்கத்திற்கும் பெண்ணாசையே வித்தாக இருப்பதை உணர்ந்தது
கங்கா நதியே ஒரு பேரழகியாக வடிவெடுத்து நதியின் கரையில் நிற்கிற சித்திரம் அவர் மனக்கண்ணில் தோன்றியது. வியாசர் இதயம் அம்மா ..அம்மா என்று தாய்ப்பாசத்தால் விம்மியது. அடக்கிக்கொண்டு மஹாபாரதக் கதையைச் சொல்லத்தொடங்கினார் அவர் கருத்து கங்கை நதிக்குச் சென்றது. அவர் சொல்லத்தொடங்கினார்! [தொடரும்]

1 comment:

  1. Classical introduction and awaiting to read complete bharatham in your writings. Great work sir!

    ReplyDelete